பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பான பணியிடத்தை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்திய மருத்துவ சங்கம் நாடு முழுவதும் மற்றும் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 24 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது என்று இந்திய மருத்துவ சங்க (IMA) தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன் தெரிவித்தார். சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கும் வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முடிவடையும். எனினும் இந்த வேலை நிறுத்தத்தால் அவசர மற்றும் விபத்து சேவைகள் பாதிக்கப்படாது என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் உறுதியளித்துளளார்.
மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்ற வலியுறுத்தல்
மருத்துவர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கவும், மருத்துவமனைகளை பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கவும், குற்றவாளிகளை விசாரித்து தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மரியாதைக்குரிய இழப்பீடு வழங்கவும் மத்திய சட்டம் தேவை என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் கூறினார். இந்திய மருத்துவ சங்கத்தில் நான்கு லட்சம் மருத்துவர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் இலாப நோக்கற்ற அமைப்பான முற்போக்கு மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மன்றமும் (BMSF) பெண் மருத்துவர்கள் மத்தியில் பணிப் பாதுகாப்பு குறித்த அச்சம் உள்ளது எனக் கூறி, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, குடியுரிமை மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FORDA) கொல்கத்தாவில் மீண்டும் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது.