பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு
பெங்களூரில் போக்குவரத்து சிக்னல்களை மீறும் முன்னும், அதிவேகமாக பயணிக்கும் முன்னும் இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிடிப்பட்டால் போக்குவரத்து காவல்துறையினர் உங்கள் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவர். சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெங்களூரு போக்குவரத்துக் காவல்துறையின் கிழக்குப் பிரிவு இந்த வாரம், நகரின் தகவல் தொழில்நுட்ப வழித்தடமான வெளிவட்டச் சாலை மற்றும் ஒயிட்ஃபீல்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் பரீட்சார்த்த முறையில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தற்போது கிழக்கு பிரிவில் மட்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால், விதிமீறல்கள் குறையும் பட்சத்தில், நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலை பாதுகாப்பை உறுதி செய்யவே புதிய நடைமுறை
குறிப்பிட்ட பகுதியில் அதிகப்படியான விதிமீறல்கள், ஐடி நிறுவன ஊழியர்களால் நிகழ்வதை போக்குவரத்து காவல்துறையினர் கண்டறிந்ததால், இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி என்டிடிவியிடம் தெரிவித்தார். "பெங்களூரு கிழக்குப் பகுதியில் சோதனை அடிப்படையில் இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். எனவே, ஐடி நிறுவன ஊழியர்கள் யாராவது போக்குவரத்து விதிகளை மீறி பிடிபட்டால், குறிப்பிட்ட விதிமீறல் குறித்த தகவல் அந்தந்த நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும். வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது செய்யப்படுகிறது" என காவல்துறை துணை ஆணையர் குல்தீப் குமார் ஜெயின் கூறினார். மேலும், காவல்துறையினர் தொழில்நுட்ப நிறுவனங்களையும் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.