பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி
பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெல்லாது என்று தெரிவித்தோடு, காங்கிரஸ் கட்சியை "காலாவதியான" கட்சி என்றும் விவரித்தார். ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி, "மேற்கு வங்கத்தில் காங்கிரஸால் 40 இடங்களை கூட தாண்ட முடியாது என்ற சவால் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் 40 இடங்களையாவது பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்." என்று காங்கிரஸ் கட்சிக்கு அவர் சவால் விடுத்தார். மேலும் பேசிய அவர், கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன் கார்கே ராஜ்யசபாவில் நன்றாக பேசியதாக கிண்டல் செய்தார்.
மலிகார்ஜுன் கார்கேவின் உரையை கிண்டல் செய்த பிரதமர் மோடி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கிண்டல் செய்த பிரதமர், "அன்று என்னால் சொல்ல முடியவில்லை, ஆனால் கார்கே ஜிக்கு எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்று மிகுந்த கவனத்துடனும் மகிழ்ச்சியுடனும் நான் அவறது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். மக்களவையில் பொழுதுபோக்கு இல்லாத கவலை அவரால் தீர்ந்துவிட்டது" என்று கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை ராஜ்யசபாவில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன் கார்கே, மக்களவையில் அரசாங்கத்தின் பெரும்பான்மையைப் பற்றி ஒரு கருத்தைக் கூறினார். "உங்களிடம் 330, 334 இடங்கள் உள்ளன. மெஜாரிட்டி இப்போது 400ஐ தாண்டி வருகிறது" என்று கூறிய அவர், ஆனால் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிவித்தார். அவர் 400 என்று குறிப்பிட்டு கூறியது பாஜகவின் தேர்தல் அடைமொழியாகும்.
பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என்று கார்கே கூறினாரா?
ஆனால், அந்த வார்த்தைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட சில பாஜக தலைவர்கள், பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவே ஒப்புக்கொண்டார் என்று கூறி கிண்டல் செய்து வந்தனர். அதே கருத்துக்காக பிரதமர் மோடியும் தற்போது கார்கேவை கிண்டல் செய்துள்ளார். "கார்கே நீண்ட நேரம் பேசியதில் நான் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் இவ்வளவு பேச அவருக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு தான் இரண்டு சிறப்புத் தளபதிகள் அங்கு இல்லை என்பதை நான் உணர்ந்தேன்." என்று பிரதமர் மோடி தனது கிண்டல் பேச்சை தொடர்ந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம்ரமேஷ் மற்றும் கே.சி.வேணுகோபாலை தான் பிரதமர் 'இரண்டு சிறப்புத் தளபதிகள்' என்று நகையாடி இருக்கிறார்.
ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீதான தனது விமர்சனத்தை மீண்டும் தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "நேரு ஒரு முறை முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தனக்கு இடஒதுக்கீட்டில் உடன்பாடில்லை என்றும், இடஒதுக்கீடு தகுதியற்றவர்களிடம் இருக்கும் திறமையின்மையை ஊக்குவிப்பதற்கு சமம் என்றும் அவர் கூறியிருந்தார். அதனால், காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் SC/ST களின் நலனுக்கு எதிரானது." என்று தெரிவித்தார். மக்களவையில் சில நாட்களுக்கு முன் உரையாடும் போதும் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் நேருவை கடுமையாக விமர்சித்திருந்தார். முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் தங்கள் உரைகளில் இந்திய மக்களை "சோம்பேறிகள்" என்றும் "சுறுசுறுப்பு இல்லாதவர்கள்" என்றும் கூறியதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்,
காங்கிரஸ் வீழ்ச்சியைக் கண்டது: பிரதமர் மோடி
இன்று ராஜ்யசபாவில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் எனக்கு நினைவிருக்கிறது. நாம் அந்த கட்டிடத்தில்(பழைய நாடாளுமன்றம்) அமர்ந்திருப்போம். அப்போது நாட்டின் பிரதமரின் குரல்களை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது... இன்றும் நான் சொல்வதை கேட்க கூடாது என்ற முடிவுடன் தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களால் என் குரலை நசுக்க முடியாது. நாட்டு மக்கள் இந்தக் குரலை வலுப்படுத்தியிருக்கிறார்கள்... நானும் இந்த முறை தயாராகவே வந்திருக்கிறேன்." என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகள் கூட காலாவதியாகிவிட்டது என்று இன்று பிரதமர் மோடி விமர்சித்தார். "பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த பெரும் கட்சி வீழ்ச்சியைக் கண்டது. நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை, உங்களுக்கு எங்களுடைய அனுதாபங்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.