இரண்டு பேரை வெட்டி கொன்றுவிட்டு இன்ஸ்டகிராமில் பதிவிட்ட குற்றவாளி
நேற்று பெங்களூரில் இருவரை வெட்டி கொன்ற கொலைக் குற்றவாளியான ஷபரீஷ் என்ற பெலிக்ஸ்(27) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகசிய செய்திகளை வெளியிட்டுள்ளார். joker_felix_rapper_ என்ற பெயருடன் கூடிய பெலிக்ஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 16,600க்கும் மேற்பட்ட 'பாலோவர்ஸ்' உள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை தானே "பேஷன் மாடல்" என்றும் "கன்னட ராப் பாடகர்" என்றும் வர்ணித்துள்ள இந்த ஆசாமி, நேற்று பெங்களூரில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை(CEO) அவர்களது அலுவலகத்திற்குள் சென்று கொலை செய்திருக்கிறார். இந்நிலையில், அவர் இன்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இரு கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த வழக்கு
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் அவர், "இந்த பூமியில் உள்ள மக்கள் எப்போதும் முகஸ்துதி செய்கிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள். அதனால்தான் நான் இந்த பூமியில் உள்ள மக்களை காயப்படுத்துகிறேன். நான் கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துவேன், நல்லவர்களை ஒருபோதும் காயப்படுத்த மாட்டேன்." என்று தெரிவித்துள்ளார். நேற்று முதலில் இந்த வாக்கியங்களை பதிவிட்ட அவர், அதற்கு பிறகு இரட்டை கொலை குறித்த செய்திகளையும் தனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். ஏரோனிக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினுகுமார்(40) மற்றும் எம்டி ஃபனிந்திர சுப்ரமணியா(36) ஆகியோரை இரு கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த வழக்கில் போலீஸ் இன்று இவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.