திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, டிசம்பர் 4 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டி.பிரபுசங்கர் டிசம்பர் 4 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேறு எந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது?
புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிசம்பர்-4ம்,தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி-நாகர்கோவில் மாநகராட்சியில் அமைந்துள்ள முதன்மை கத்தோலிக்க ஆலயமான புனித சவேரியார் பேராலயத்தின் பெருவிழா திருப்பலியை முன்னிட்டு, டிசம்பர்-4ம்,தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் டிச.16ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தை பொறுத்து, பிற கடலோர தமிழக மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.