புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று(மே 28) நிறுவப்பட்டது.
செங்கோல் என்ற வார்த்தையை செம்மை+கோல் என்று பிரிக்கலாம்.
செம்மை என்ற வார்த்தை செழிப்பு, சிறப்பு, அரசத் தன்மை, வீரம் என்று பொருள்படும்.
அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த செங்கோல் முடியாட்சி மற்றும் அதிகாரத்தின் சின்னமாக கருதப்பட்டது.
"ஆகஸ்ட் 14, 1947அன்று இரவு 10.45 மணியளவில், பண்டிட் நேரு இந்த செங்கோலை தமிழகத்திலிருந்து பெற்றார். மேலும், பல மூத்த தலைவர்கள் முன்னிலையில், சுதந்திரத்தை அடைவதற்கான அடையாளமாக இதை ஏற்றுக்கொண்டார். இது ஒரு மாற்றத்தின் அடையாளம். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதற்கான சின்னம் இது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.
details
செங்கோலுக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி
இதுவரை உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த செங்கோல் வைக்கப்பட்டிருந்தது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படுவதற்கு முன், 'செங்கோல்' தமிழ்நாட்டின் பல்வேறு ஆதீனங்களைச் சேர்ந்த 30 சைவ குருமார்களால் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆதீனங்களைச் சேர்ந்த குருமார்கள் தமிழ் சைவ பாடல்களை பாடி வாழ்த்தினர்.
பிரதமர் மோடி, செங்கோலுக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார்.
அதற்கு பின், நாதஸ்வரம் மற்றும் வேத மந்திர முழக்கங்களுக்கு மத்தியில், "செங்கோலை" ஊர்வலமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் எடுத்து சென்ற பிரதமர் மோடி, அதை மக்களவை சபாநாயகர் நாற்காலியின் வலது பக்கத்தில் நிறுவினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.