தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு தென் தமிழகத்திற்கு சென்றுள்ளன. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகர்கோவிலில் அதிகமாக கனமழை பெய்துவருவதால் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் வீட்டுக்குள் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, அந்த சாலைகள் முடக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தென்காசி பகுதியில் பெய்த கனமழை காரணமாக, பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி போன்ற அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளது.
பழைய குற்றாலத்தில் வெள்ளம்
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்ட சபா நாயகர் அப்பாவு, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், கன்னியாகுமரியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை அணையை ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட சேவியர் காலனியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
நெல்லை - மழைக்கால அவசர உதவி எண்கள்
மக்கள் உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 6 மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 6 மணிநேரத்திற்குள் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த பூதபாண்டியன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்த 4 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளதால் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால், நெல்லை பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக மேல்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.