
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சேலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென் இந்தியாவின் மேல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதேபோல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளது.
கனமழை
கனமழைக்கு சாத்தியமான மாவட்டங்கள்
இன்று, சேலம், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாளை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று, தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்; சில இடங்களில் லேசான மழையும் பெய்யலாம்.