கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை
செய்தி முன்னோட்டம்
தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.
பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அவனது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனவே, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் திருநெல்வேலியில் உள்ள என்ஜிஓ காலனியை சேர்ந்த கே அஸ்வின் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அஸ்வின் சமீபத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
இந்நிலையில், நேற்று அந்த சிறுவன் தென்காசியின் மேலகரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
இந்தியா
மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்லவும் தடை
அதனைத்தொடர்ந்து, நேற்று மதியம் குளித்து மகிழ, அவர் தனது உறவினர்களோடு பழைய குற்றாலம் சென்றார்.
இந்நிலையில், அஸ்வின் மற்றும் சில சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து கொண்டிருந்த போது திடீரென நீர்வரத்து அதிகரித்தது. அப்போது வந்த வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார்.
அதன்பிறகு, கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர், எஸ்பி டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சிறிது நேரத்தில், பழைய குற்றாலம் அருவியில் இருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் அஸ்வின் உடலை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.
பழைய குற்றாலம் மட்டுமின்றி குற்றாலம் மெயின் அருவி, ஐந்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனிடையே திருநெல்வேலியில் உள்ள மணிமுத்தாறு அருவிகள் மற்றும் மாஞ்சோலை மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.