கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல்
இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கனமழை எச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் வெளியான அறிவிப்பில் பருவமழை பாதிப்பு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு, நாளை (அக்டோபர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IT அலுவலகங்களுக்கு WFH அறிவுறுத்தல்
மேலும், பருவமழை தீவிரம் காரணமாக நாளை முதல் வரும் 18ஆம் தேதி வரை தனியார் IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும் அவர் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.