காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்
காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரித்துள்ளன என்று புதிய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், நாட்டின் 90 சதவீதத்திற்கும் மேலான இடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரமித் தேப்நாத் தனது குழுவுடன் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளார். முக்கியமாக, வெப்ப அலைகளின் தாக்கம் டெல்லியில் அதிகமாக இருக்கிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை(SDGs) இந்தியா அடைவதற்கு வெப்ப அலைகள் பெரும் தடையாக இருக்கிறது. தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் மதிப்பீட்டு அளவீடுகளால், வெப்ப அலைகளின் தாக்கத்தையும் காலநிலை மாற்றத்தின் சரியான தாக்கத்தையும் கணிக்க முடியாது என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வெப்ப அலைகளினால் நவி மும்பையில் 13 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் வெப்ப அலைகளால், கடந்த 50 ஆண்டுகளில் 17,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம்.ராஜீவன், விஞ்ஞானிகளான கமல்ஜித் ரே, எஸ்.எஸ்.ரே, ஆர்.கே.கிரி மற்றும் ஏ.பி.டிம்ரி ஆகியோருடன் இணைந்து எழுதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். 1971 முதல் 2019 வரை நாட்டில் 706 வெப்ப அலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 2021 இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, நவி மும்பையில் நடைபெற்ற மகாராஷ்டிர அரசு விருது வழங்கும் விழாவில் 13 பேர் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழந்தனர். வெப்ப அலைகளினால் ஒரே நேரத்தில் இத்தனை பேர் உயிரிழப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.