Page Loader
மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு
ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸ் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Sindhuja SM
Apr 17, 2023
09:37 am

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஏப் 16) மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் நிகழ்வில் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 11 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சுமார் 50 பேர், அதிக வெப்பத்தால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று மருத்துவமனையில் சந்தித்தார். மகாராஷ்டிரா அரசால் வழங்கப்படும் விருதை, சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார். இந்த நிகழ்வு நவி மும்பையில் நடைபெற்றது. நவி மும்பையில் நேற்றைய தினம் பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டது. ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸ் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

details

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

நவி மும்பையில் உள்ள பிரமாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழா மதியம் 1 மணி வரை நடந்தது. மைதானத்தில் பார்வையாளர்களுக்கான இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு மேல் கொட்டகை எதுவும் போடப்படவில்லை. முதலமைச்சர் ஷிண்டே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு அரசாங்கம் பணம் செலுத்தும் என்று ஃபட்னாவிஸ் ட்வீட் செய்திருந்தார். அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.