"இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம்
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது மனம் உடைந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (ஜூன் 30) தெரிவித்தார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, "மணிப்பூரில் வன்முறையால் அன்புக்குரியவர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பது மற்றும் கேட்பது மனவேதனை அளிக்கிறது. ஒவ்வொரு சகோதரரின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார். மோதலால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி, "மணிப்பூருக்கு இப்போது மிக முக்கியமான விஷயம் அமைதி மற்றும் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுதான். அந்த இலக்கை நோக்கி நமது முயற்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் பயணத்தை தடுத்த மாநில அரசு
முன்னதாக நேற்று, வியாழக்கிழமை (ஜூன் 29), மணிப்பூரின் சுராசந்த்பூரில் இனக் கலவரம் நடந்த பகுதிக்கு ராகுல் காந்தி காரில் சென்றார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து மீண்டும் இம்பால் திரும்பி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதை அதிகாரிகள் தடுக்கிறார்கள் என்று முன்பு குற்றம் சாட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, பின்னர் மொய்ராங்கிற்கு வர நிர்வாகம் ராகுல் காந்தியை அனுமதிக்கவில்லை என்று கூறினார். இது குறித்து பேசிய ராகுல் காந்தியும், அரசாங்கம் தன்னைத் தடுப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், அமைதிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.