ஹத்ராஸ்: 6 பேர் கைது, முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு
கடந்தது செவ்வாய்க்கிழமை ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சத்சங்கத்தை நடத்துவதில் ஈடுபட்டுள்ள ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அலிகார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஷலப் மாத்தூர் கூறுகையில், "இந்த சம்பவத்தில் 4 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் 'சேவதர்களாக' பணியாற்றினர்." எனத்தெரிவித்தார்.
தலைமறைவான முக்கிய குற்றவாளி
இதற்கிடையில், 'முக்கிய சேவதர்' தேவ் பிரகாஷ் மதுகர் என்பவர் தான் எப்ஐஆரில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இந்த 'போலே பாபா'வின் பிராதன சீடராகவும், ஊரெங்கும் சத்சங்கங்களை நடத்துபவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் தற்போது தலைமறைவாகி விட்ட மதுகரை கைது செய்ய, அவரைபற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். மேலும்,மதுகரை கைது செய்ய நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை பிறப்பித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாயமான போலே பாபா
எனினும், இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆரில் சாமியார் 'போலே பாபா' பெயர் தற்போதுவரை சேர்க்கப்படவில்லை. அனாலும், காவல்துறையினர் அவரை தேடி வருவதாகவும், விரைவில் 'போலே பாபா'வையும் அதிகாரிகள் விசாரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. மறுபுறம், 'போலே பாபா' என்றழைக்கப்படும் நாராயண் சகார் ஹரியின் பின்னணி குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்த நேரத்தில், சத்சங்க அமைப்பாளர்கள் சாட்சியங்களை அழித்தும், கூடியிருந்தவர்களின் செருப்புகள் மற்றும் பிற பொருட்களை அருகிலுள்ள வயல்களில் வீசியும் நிகழ்வில் இருந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைக்க முயன்றதாக எஃப்ஐஆர் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.