செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாகக்கூறி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன்.,14ம்தேதி கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பைபாஸ் சர்ஜரி செய்து சிகிச்சைப்பெற்று வருகிறார். இதனிடையே, செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகக்கூறி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவானது அண்மையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதிகள் தீர்ப்பின்தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், நேற்று(ஜூலை.,4), இவ்வழக்கின் தீர்ப்பினை, 2 மாறுபட்ட கருத்தாக, அமர்வு நீதிபதிகள் அறிவித்தனர். நீதிபதி ஜெ.நிஷா பானு,"இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுத்தான். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை" என்று கூறினார்.
3வது நீதிபதியினை நியமித்தார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா
மேலும்,"செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள காலத்தினை நீதிமன்றக்காவலில் இருப்பதாக கருதக்கூடாது என்று அமலாக்கத்துறையின் கோரிக்கையினை ஏற்கமுடியாது. அவரை உடனே விடுதலைச்செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிபதி பரதசக்கரவர்த்தி,"இந்த ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் நிராகரிக்கிறேன்" என்று தெரிவித்தார். தொடர்ந்து,"அதேபோல் அமலாக்கத்துறையின் கோரிக்கையினை நான் ஏற்கிறேன். செந்தில்பாலாஜி அதிகப்பட்சம் இன்னும் 10 நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சைப்பெறலாம். அதற்குமேல் சிகிச்சைத்தேவைப்பட்டால் அவர் சிறையிலுள்ள மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்படவேண்டும்" என்று கூறினார். அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய காரணத்தால், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கினை விசாரிக்க, தற்போது 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா நியமித்துள்ளார். இந்த வழக்கில், மூன்றாவது நீதிபதி வழங்கப்போகும் தீர்ப்பே இறுதியானது.