ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம்
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூலை 24) உத்தரவிட்டது. வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, ஒரு பழங்கால இந்து கோவிலின் மேல் கட்டப்பட்டதா என்பதை தீர்மானிக்க இன்று காலை இந்திய தொல்லியல் துறை அந்த மசூதியில் ஆய்வை தொடங்கியது. மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. இதற்கு எதிராக மசூதி நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. "தொல்லியல் துறை ஆய்வுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, அந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது" என்று மசூதி நிர்வாகத்தின் வழக்கறிஞர் வாதிட்டார்.
அறிவியல் பூர்வமாக மட்டும் அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி
மனுதாரர்களின் தரப்பை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் "எந்தவொரு ஆக்கிரமிப்பு வேலையும் நடைபெறாமல் இருக்கும்படி நாங்கள் செய்கிறோம்" என்று தெரிவித்தார். மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முஸ்லீம் மனுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அறிவியல் பூர்வமாக மட்டும் அகழ்வாராய்ச்சி செய்ய தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை ஒரு வார காலத்திற்கு அந்த இடத்தில் எந்த தோண்டுதல் பணியும் நடைபெறாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.