
ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை
செய்தி முன்னோட்டம்
இந்திய தொல்லியல் துறையை(ASI) சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இன்று(ஜூலை-24) ஆய்வை தொடங்கினர்.
அந்த மசூதி ஒரு பழங்கால இந்து கோவிலின் மேல் கட்டப்பட்டதா என்பதை தீர்மானிப்பது அவர்களது நோக்கமாக உள்ளது.
ஞானவாபி மசூதி நிர்வாகக் குழு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆய்வு தொடங்கியுள்ளது.
ஐந்து இந்துப் பெண்கள் தங்களுக்கும் ஞானவாபி மசூதியில் வழிபடுவதற்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், மசூதியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ASIக்கு உத்தரவிட்டார்.
உய்ப்
வசுகானா அமைப்பு இருக்கும் இடத்தில் ஆய்வு நடத்தப்படாது
மசூதியின் மூன்று குவிமாடங்களுக்கு கீழே ஆய்வு செய்ய GPR(கிரவுண்ட் பெனட்ரேட்டிங் ரேடார்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், "தேவைப்பட்டால்" அங்கு அகழாய்வு நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் அந்த மசூதியின் வசுகானா அமைப்பை பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருந்ததால், வசுகானா அமைப்பு இருக்கும் இடத்தில் ஆய்வு நடத்தப்படாது.
இந்த அமைப்பை தான் இந்து மனுதாரர்கள் சிவலிங்கம் என்று கூறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொல்லியல் துறை ஆய்வை அனுமதித்து மாவட்ட நீதிபதி தற்போது உத்தரவு பிறப்பித்திருப்பது, சிவலிங்கத்தின் ஆய்வை ஏற்கனவே ஒத்திவைத்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாக உள்ளது என்று மஸ்ஜித் கமிட்டி வாதிட்டு வருகிறது.