ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இதன் பகுதியருகே அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.
இந்த மசூதியானது முகலாயர் ஆட்சியின் போது எழுப்பப்பட்ட நிலையில், காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஓர் பகுதியினை இடித்து கட்டப்பட்டதாக பல காலங்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அதற்கு ஏற்றவாறு சிவ லிங்கம் ஒன்று மசூதியின் உள்ளே அடையாளம் காணப்பட்டு கண்டெடுக்கப்பட்டது.
ஆனால் அதனை நீரூற்று என்று மசூதி நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து அறிவியல் ரீதியான ஆய்வினை நடத்தி ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல்துறைக்கு மாவட்ட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி கடந்த ஜூலை 21ம் தேதி அளித்த நிலையில், தொல்லியல்துறை தனது ஆய்வினை ஜூலை 24ம் தேதி மசூதியில் மேற்கொண்டது.
அறிக்கை
அறிக்கையினை தொகுக்க கால அவகாசம் நீட்டிக்க கோரிய தொல்லியல்துறை
ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஆய்வறிக்கையினை தாக்கல் செய்ய தொல்லியல் துறை தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருகிறது.
கால அவகாசம் கோரி பல முறை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கு கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், 'ஆய்வு நிறைவடைந்துவிட்டது. ஆனால் அறிக்கையினை தொகுக்க வேண்டிய காரணத்தினால் கால அவகாசத்தினை நீட்டிக்க வேண்டும்' என்று தொல்லியல்துறை சார்பில் மீண்டும் கோரப்பட்டது.
அதனை ஏற்ற நீதிமன்றம் கால அவகாசத்தினை நீட்டித்து நவம்பர் 17ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், மேலும் இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் 28ம் தேதி ஆய்வறிக்கையினை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.