பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்: குஜராத்தில் பரிதாபம்
குஜராத்தின் சூரத்தில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, அந்த குடும்பத்திற்கு பண பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது. எனினும், இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இன்று காலை சூரத்தின் பலன்பூர் பாட்டியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பர்னிச்சர் தொழிலதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இறந்து கிடந்தனர். உயிரிழந்தவர்களில் ஏழு, ஐந்து மற்றும் மூன்று வயதுடைய 3 குழந்தைகளும் அடங்குவர். பர்னிச்சர் தொழிலதிபரான மகேஷ் சோலங்கி, கடன் பிரச்சனை காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷத்தை வைத்துவிட்டு தானும் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது.
பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்
மகேஷ் சோலங்கி, பிறருக்கு கடன் வழங்கி இருந்ததாகவும், கடன் வாங்கியவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் அவர் பண பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை மகேஷ் சோலங்கியின் வீட்டில் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீசுவதை கவனித்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மனிஷ் சோலங்கி(35), அவரது மனைவி ரீட்டா(32), மற்றும் அவர்களது குழந்தைகள் திஷா (7), காவ்யா (5), மற்றும் குஷால்(3) ஆகியோரின் உடல்கள்அவர்களது வீட்டின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டன.மற்ற இரண்டு உடல்களும் மனீஷின் பெற்றோர்களான காந்திலால் சோலங்கி(65) மற்றும் ஷோப்னா(60) ஆகியோரின் உடல்கள் ஆகும்.