மக்களவை தேர்தல் 2024: மாலை 5 மணி வரை 102 இடங்களில் 59.7% வாக்குப்பதிவு
மக்களவை தேர்தல் 2024 இன்று தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம்(39), ராஜஸ்தான்(12), உத்தரப் பிரதேசம்(8), மத்தியப் பிரதேசம்(6), உத்தரகாண்ட்(5), அருணாச்சலப் பிரதேசம்(2), மேகாலயா(2) அந்தமான் நிக்கோபார்(1), மிசோரம்(1), நாகாலாந்து(1), புதுச்சேரி(1), சிக்கிம்(1) மற்றும் லட்சத்தீவு(1) ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இன்று முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது, இது தவிர, அசாம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா 5 இடங்களிலும், பீகாரில் 4 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 3 இடங்களிலும், மணிப்பூரில் 2 இடங்களிலும், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் தலா ஒரு இடத்திலும் இனி தேர்தல் நடைபெறும்.
தமிழகத்தில் 63.2 சதவீத வாக்குகள் பதிவு
ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் அருணாச்சல பிரதேசம்(60 இடங்கள்) மற்றும் சிக்கிம் (32) ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 59.7 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் 63.2 சதவீத வாக்குகளும், ராஜஸ்தானில் 50.3 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 57.5 சதவீதமும், மத்தியப் பிரதேசத்தில் 63.3 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுத் தேர்தலுடன் நடைபெற்ற மாநிலத் தேர்தலைப் பொறுத்தவரை, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் முறையே 67.5 மற்றும் 64.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.