சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன?
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் செயல்பட்டு வரும் ஓர் தனியார் வளாகத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த நிலையில், அவர்களை உள்ளே நுழைய விடாமல் அந்த வணிகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை ரேடியல் சாலையில் கடந்த 6 மாத காலமாக சரவணா செல்வரத்தினம் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்த வணிக நிறுவனம் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தினால் இதற்கான மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லையாம். அதனால் இந்நிறுவனம் ஜெனரேட்டர் உதவியோடு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மாசு ஏற்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்
இதனையடுத்து அங்கு மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் இன்று(செப்.,27) காலை சரவணா செல்வரத்தினம் வணிகத்திற்கு சீல் வைக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மேலாளர் உள்ளிட்டோர் உங்களுக்கு இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்க உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? என்றும், ஏற்கனவே இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சீல் வைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர் என்று தெரிகிறது. மேலும் வணிகம் செய்யும் இந்த வளாகத்தித்திற்கு தாங்கள் சீல் வைக்க வரவில்லை மாசினை ஏற்படுத்தும் ஜெனரேட்டர்களை செயல்படாமல் தடுக்கவே வந்ததாகவும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.