மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி
154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று(ஆக். 2) மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் அனைவரின் பாதையையும் தொடர்ந்து ஒளிரச் செய்வதாக பிரதமர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார். "காந்தி ஜெயந்தி என்ற சிறப்பான நாளில் நான் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவரது காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது. ஒட்டுமொத்த மனித குலத்தின் ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேலும் வளர்க்க அவர் தூண்டுகிறார். அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்." என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
திரௌபதி முர்மு, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மகாத்மாவுக்கு அஞ்சலி
மகாத்மா காந்தியின் சித்தாந்தம் காலத்தால் அழியாதது என்றும், அது எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். மேலும், நாட்டின் நலனுக்காக அவரது கொள்கைகள் மற்றும் போதனைகளைப் பின்பற்றுமாறு குடியரசுத் தலைவர் மக்களிடம் வலியுறுத்தினார். சத்தியம், அகிம்சை, சமத்துவம் ஆகிய மகாத்மாவின் கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார். காந்தியை நினைவுகூரும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மகாத்மாவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். "சத்தியம், அகிம்சை மற்றும் நல்லிணக்கத்தின் பாதை, இந்தியாவை ஒன்றிணைப்பதற்கான பாதையாகும். அது மகாத்மா காந்தியால் காட்டப்பட்டது. பாபுவின் பிறந்தநாளில் அவருக்கு நூற்றுக்கணக்கான வணக்கங்களை தெரிவிக்கின்றேன்" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.