Bisleri குடிநீரில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் கண்டுபிடிப்பு: வழக்குத் தொடர FSSAI அனுமதி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் தயாரிக்கும் பாட்டில் குடிநீர் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனையில் பாதுகாப்பற்றவை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது சட்டரீதியான வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளித்துள்ளது. உணவுப் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் FSSAI எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிஸ்லெரி மீது வழக்குத் தொடரவும், ஆஷா கன்ஃபெக்ஷனரி நிறுவனத்தின் சாக்லேட் குக்கீஸ்களை சந்தையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புற்றுநோய் காரணிகள்
பிஸ்லெரி குடிநீரில் கண்டறியப்பட்ட புற்றுநோய் காரணிகள்
பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பகட்ட ஆய்வகப் பரிசோதனையில், குடிநீரில் இருக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட அளவை விட புரோமேட் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் கீழ் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அந்த மாதிரி 'பரிந்துரை உணவு ஆய்வகத்திற்கு' அனுப்பப்பட்டது.
இரண்டாவது ஆய்விலும், அந்தக் குடிநீரில் பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் இருப்பது கண்டறியப்பட்டு பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்டது.
(குறிப்பு: புரோமேட் மற்றும் PAHs ஆகிய இரண்டுமே புற்றுநோயை உருவாக்கும் அபாயம் கொண்ட வேதிப்பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன)