சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
சாலைகள் பல்வேறு பகுதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் சென்னையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி ஆணையாளர் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்துகள் செல்லும் சாலைகள் மட்டுமல்லாது உட்புற சாலைகளும் அதிகளவில் தோண்டப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வேளச்சேரி, தி.நகர், அடையாறு மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் சாலைகள் பல இடங்களில் படுமோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறு
மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளைத் தவிர, மயிலாப்பூர் மற்றும் பெரம்பூர் பகுதிகளிலும் சாலை சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. இதேபோல் கோடம்பாக்கத்திலும் சீரமைப்பு பணிகள் மெதுவாக நடைபெறுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், முகப்பேர் பகுதிகளில் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடப்பது பொதுமக்களுக்கு கடும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், இவ்வாறு சாலைகளை தோண்டுவது சிரமத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னையில் செப்டம்பர் 30 முதல் சாலைகளை தோண்டுவது நிறுத்தப்படும் என்றும், புதிதாக சாலைகளை தோண்ட அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.