நண்பர்கள் தினம் : அரசியலில் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் நட்பு பாராட்டிய அரசியல் தலைவர்கள்
தற்போதுள்ள அரசியல் உலகம் போட்டி, பொறாமை நிறைந்தது என்பது மக்களின் பொதுவான கருத்து. இப்படிப்பட்ட போட்டிகள் நிறைந்த துறையிலும் புரட்சித்தலைவர் டாக்டர்.,எம்ஜிஆர்'க்கும், கலைஞர்.,கருணாநிதிக்கும் இடையேயான நட்பு இறுதிவரை நீடித்தது என்பது நெகிழ்ச்சியளிப்பதாகும். ஆரம்பக்காலத்தில் கோவையில் பட்சிராஜா உள்ளிட்ட ஸ்டுடியோக்கள் இயங்கியப்பொழுது இவர்கள் இணைந்து தங்கியிருந்த வாடகைவீடு இன்னமும் அப்படியே உள்ளதாம். அதனைத்தொடர்ந்து சேலம் மாடர்ன் திரையரங்கில் இவர்கள் பணியாற்றுகையில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு வலுப்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்.-ஜானகி இணைந்து நடித்த 'மருதநாட்டு இளவரசி'என்னும் படத்திற்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி தான் என்பது குறிப்பிடவேண்டியவை. சினிமாவுலகில் மட்டுமல்லாமல் அரசியல்துறையிலும் இவர்களது நட்பு மிக அழகாக தொடர்ந்துள்ளது. அதன்படி, பேரறிஞர்.,அண்ணா மறைவிற்கு பின்னர் திமுக'வில் கலைஞர் கருணாநிதியினை முன்னிறுத்தியதில் எம்ஜிஆர் பங்கு மிகஅதிகம்.
தூய்மை மாறா நட்பு கொண்ட தலைவர்கள்
திமுக'வின் முக்கியமான பொறுப்புகளை அவர் ஏற்க உதவியதும் எம்ஜிஆர்.,தான் என்று அரசியல் வட்டாரங்களில் இன்றளவும் பேசப்படுகிறது. எம்ஜிஆர் அதிமுக கட்சியினை துவங்கி வெற்றிப்பெற்று தமிழக முதல்வர் என்ற பதவிக்கு வந்தப்பின்னரும் இவர்கள் இடையே அரசியல் சார்ந்த விமர்சனங்கள் தான் இருந்துள்ளதே தவிர, அவர்களது நட்புறவு நீடித்துள்ளது. இத்தகைய நட்பு பாராட்டிய தனது நீண்டக்கால நண்பரான எம்ஜிஆர்'ன் மரணச்செய்தியினை கேட்ட கலைஞர் தன்னுடைய நண்பர் பிரிவினை தாங்கமுடியாமல் கதறி அழுததும், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு நீர், ஆகாரமின்றி இருந்ததும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி அறியப்பட்ட உண்மையாகும். இவர்கள் அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் தங்கள் தனிப்பட்ட வாழக்கையில் தூய்மை மாறா நண்பர்களாக கடைசிவரை இருந்துள்ளனர் என்பது வியக்கத்தக்க உண்மை.