மணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு
மெய்த்தே சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழங்குடியின குழுக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது. இதற்கு மத்தியில், மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவம் இன்று(மே 4) அணிவகுப்பு நடத்தியது. இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மொபைல் இன்டர்நெட் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மணிப்பூர் அரசு. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வரவழைக்கப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் சார்பில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
7,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டனர்
வன்முறையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் 7,500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். "மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக இந்திய இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் 7,500 க்கும் மேற்பட்ட பொதுமக்களை இரவோடு இரவாக வெளியேற்ற பெரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. மணிப்பூரில் உள்ள மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய இராணுவம் உறுதிபூண்டுள்ளது." என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியில் நேற்று கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.