குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
நாளை டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுதின விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார். சமீபகாலமாக, சுதந்திரதின விழா மற்றும் குடியரசுதின விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள் அழைக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்தாண்டின் குடியரசுதின விழாவில் பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடப்பட்டது. இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரான்ஸ் அதிபர், 2-நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகிறார். விமானம் மூலம் இன்று மதியம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வருகிறார் மேக்ரான். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், மோடியுடன் சாலை பேரணியிலும் பங்கேற்பார். அதன்பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கவுள்ளார் அதிபர் மேக்ரான்.
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மேக்ரான்
ஜெய்ப்பூர் பயணத்தை நிறைவு செய்துகொண்டு, இன்றிரவு 8.50 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் மேக்ரான், நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். டெல்லியில், கர்தவ்யா பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், மேக்ரான் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் பங்கேற்க உள்ளது. 2016 இல் பிரான்சுவா ஹாலண்டே, 2008 இல் நிக்கோலஸ் சார்கோசி, 1998 இல் ஜாக் சிராக், 1980 இல் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் மற்றும் 1976 இல் ஜாக் சிராக் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவின் குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் ஆறாவது பிரெஞ்சு தலைவர் (ஐந்தாவது ஜனாதிபதி) மேக்ரான் ஆவார்.