தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு
இலவச கட்டாய கல்வியினை 6-14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க இலவச கட்டாய கல்விக்கான குழந்தைகளின் உரிமை சட்டம் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டம் 21-Aன் கீழ் சட்டமாக இயற்றப்பட்டது. இதன்படி வழக்கப்படி அரசு பள்ளிகளில் இலவசமாக மாணவர்கள் படிக்கலாம். பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தினை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க ஆசைப்பட்டால் அவர்களுக்கான வழியினையும் தமிழக அரசு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் குறைந்தது 25%இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்த்து கொள்ளவேண்டும். அவர்களுக்கான கட்டணத்தினை அரசு செலுத்திவிடும். இதனைதொடர்ந்து இலவச மற்றும் கட்டாய கல்வி கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் கடந்த 20ம்தேதி துவங்கியது.
மே 18ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்
ஆன்லைன் முன்பதிவு துவங்கி இந்த 10 நாட்களுக்குள் 80,000 பேர் இதில் விண்ணப்பித்திருப்பதாக தற்போது தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் அறிவித்துள்ளார். மேலும் நாகராஜ முருகன் கூறுகையில், மே 18ம் தேதி வரை இந்த பதிவு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. rte.tnschools.gov.in என்னும் இணையதளம் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் 8ம்வகுப்பு வரை கட்டாய கல்வியினை பெறலாம். இந்நிலையில் இந்த சட்டம் மூலம் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகள், அவர்கள் வயதுக்கேற்ப வகுப்பில் சேர்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 3,98,000 மாணவர்கள் இலவச கல்வியினை பெறுகிறார்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.