கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்?
பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளியில் புதிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டது தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம். ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் இந்நிறுவனமே ஐபோன்களை இதுவரை தயாரித்து வந்திருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்சாலைக்காக 300 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து ஜூலை 1-ம் தேதிக்குள் அந்நிறுவனத்திடம் அளிக்கவிருக்கிறது சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு. புதிதாக கட்டப்படும் இந்த தொழிற்சாலையானது 2024 ஏப்ரலில் செயல்பாட்டைத் துவக்கும் என கர்நாடகாவின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் MB பாட்டில் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதகளான பால் லியு, டன் லியு மற்றும் சைமன் சாங் ஆகியோர் அமைச்சர் MB பாட்டிலை சமீபத்தில் சந்தித்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஃபாக்ஸ்கானின் திட்டம் என்ன?
ரூ.13,600 கோடி மதிப்பில் ஃபாக்ஸ்கானின் இந்த புதிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக இதன் கட்டுமானப் பணிகள் நடைபெறவிருக்கின்றன. அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 கோடி ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த தொழிற்சாலையின் மூலம் கர்நாடகாவைச் சேர்ந்த 50,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கையகப்படுத்தவிருக்கும் நிலத்திற்கு ஏற்கனவே 30% தொகையை கர்நாடக தொழிற்துறை பகுதி வளர்ச்சி ஆணையத்திடம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செலுத்தியிருக்கிறது. இந்த புதிய தொழிற்சாலைக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர், தரமான மின்சார வசதி, சாலை வசதி, கட்டுமான வசதி மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறியிருக்கிறது கர்நாடக அரசு.