Loading...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 2 நாள் போலீஸ் காவல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 2 நாள் போலீஸ் காவல்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 2 நாள் போலீஸ் காவல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 25, 2026
03:21 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூன்று பேரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷின் பிணை மனு நிலுவையில் உள்ள நிலையில், இந்த விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வழக்கின் போக்கு

ரூ.400 கோடி லஞ்சப் புகாரின் பின்னணி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதற்காக ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சம் பெறப்பட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், பி.டி. அரசகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, அன்பில் மகேஸை மூன்று நாட்களும், முத்துகுமாரை ஐந்து நாட்களும், சரவணனை ஒரு நாளும் காவலில் எடுத்து காவல்துறையினர் தனித்தனியாக விசாரித்திருந்தனர்.

கோரிக்கை

மூவரையும் ஒன்றாக விசாரிக்கக் காவல்துறை கோரிக்கை

தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ், முத்துகுமார் மற்றும் சரவணன் ஆகிய மூவரையும் ஒன்றாக சேர்த்து இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தனியார் பள்ளிகளிடமிருந்து பணத்தை நேரில் வசூலித்தது யார், மொத்தமாக எவ்வளவு தொகை பெறப்பட்டது மற்றும் வசூலிக்கப்பட்ட பணம் இறுதியாக யாரைச் சென்றடைந்தது என்பது குறித்த உண்மைகளைக் கண்டறிய மூவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

உத்தரவு

சிறப்பு நீதிமன்றத்தின் நிபந்தனை

இந்த மனுவை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, மூவரையும் இன்று காலை 11 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அனுமதி அளித்தார்.

விசாரணையின் போது மூவரையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ எவ்விதத் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கக் கூடாது என நீதிபதி கடுமையாக அறிவுறுத்தினார்.

மேலும், விசாரணைக்கு முன்பும் பின்பும் மூவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து விசாரணையைக் கவனிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நடவடிக்கை

நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

இதற்கிடையில், இவ்வழக்கில் சரணடைந்த கார் ஓட்டுநர் சரவணனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரது காவலை வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

நாளை மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்தவுடன் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் இந்தக் கூட்டு விசாரணையில் வெளியாகும் தகவல்கள் இவ்வழக்கில் அடுத்தகட்டத் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT