
அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு மாறுகிறாரா முன்னாள் MP மைத்ரேயன்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மூன்றுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் எம்.பி. வி. மைத்ரேயன் தி.மு.க.வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் தி.மு.க.வில் இணைகிறார் என இணையத்தில் செய்திகள் கசிந்துள்ளன. சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவரான மைத்ரேயன், 1991ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் 1999ல் அந்த கட்சியை விட்டு விலகி, மறைந்த ஜெயலலிதாவின் அழைப்பின்பேரில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதாவின் நெருங்கிய நம்பிக்கையாளர் என அறியப்பட்ட அவர், தொடர்ந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் பயணம்
மைத்ரேயனின் அரசியல் பயணம்
ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய கட்சி பிளவுகளின் போது, ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்த மைத்ரேயன், இ.பி.எஸ். அணியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர், கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்த அவர், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலேயே இருக்கும் அவர், தி.மு.க.வில் இணையப்போவதாகச் சொல்லப்படும் தகவல், அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாற்றம்
தொடர்ந்து அணி மாறும் அதிமுகவின் பெரிய தலைகள்
அத்துடன், அண்மைய காலங்களில் அதிமுகவிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களாக அன்வர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், வி.ஆர். தொண்டைமான் உள்ளிட்டோர் குறிப்பிடப்படுகின்றனர். இதில் அன்வர் ராஜாவுக்கு தி.மு.க.வில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக அதிமுகவிலிருந்து கட்சி மாறும் முக்கிய தலைவர்கள் வரிசையில் தற்போது மைத்ரேயனும் இணைய போகிறார் என்ற செய்தி தொண்டர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்கபோவதாக அதிமுக-பாஜக கூட்டணி அறிவித்த நிலையில், தற்போது முக்கிய தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகுவது, கூட்டணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும். மைத்ரேயனின் இந்த முடிவு, எதிர்கால தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை உருவாக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.