கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது
தமிழ்நாடு மாநிலம் கோவை மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காலம் துவங்கியுள்ளது. இதன் காரணமாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ப்ளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்து கொண்டு தான் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கோவை மாவட்டத்தில் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பிற்கான அறிகுறி காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வலியுறுத்தப்படுகிறது
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடனே மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை எடுத்து கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுரை வழங்கப்படுகிறது. இந்த காய்ச்சல் அதிகரிப்பு குறித்து அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்று எளிதாக ஏற்படும் என கூறியுள்ளார். தொடர்ந்து, காய்ச்சல், தலைவலி, இருமல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல், போன்றவை இந்த பாதிப்பின் அறிகுறிகள் என்றும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவம் எடுத்து கொள்வதன் அடிப்படையில் 7 நாட்களில் குணமடைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நோய் தொற்று அருகிலுள்ளோருக்கு பரவாமல் தடுக்க இரும்பல் வரும் போதும், தும்பும் போதும் மூக்கு மற்றும் வாயை துணியால் மூடிக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.