சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்
சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் கடந்த அதிமுக ஆட்சியின் போது துவங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் பெற்று திமுக ஆட்சியை பிடித்த நிலையில், உடனடியாக இந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேருந்து நிலையம் சரியான கட்டுமான திட்டங்கள் வகுக்கப்படாமல் கட்டப்பட்டுள்ளது என்று தற்போதைய அரசு தெரிவித்தது. அதனையடுத்து, இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகளில் மாறுதல் செய்யப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. விரைவில் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
100 பேருந்துகள் இயக்கப்பட்டு சோதனை
இந்நிலையில் சென்னையில் அண்மையில் பெய்த அந்த ஒருநாள் மழையில் இந்த பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதற்கான சீரமைப்பு பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது. மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். சீரமைப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று(டிச.,12) வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 100 பேருந்துகள் இந்த புதிய பேருந்து நிலையத்திற்குள் அனுப்பப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக விரைவில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.