முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
பாசன நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணையானது தமிழ்நாடு மாநிலத்தின் தேனி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு விளங்கி வருகிறது. தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் இருபோக பாசன வசதி பெறுவதாகவும் கூறப்படுகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணை கேரளா மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 142 அடி வரை மட்டுமே நீரினை தேக்கலாம் என்று கடந்த 2016ம்.,ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அணையில் இருந்து உபரி நீர் கேரள பகுதிகளுக்கு திறந்துவிடப்படும்
இதன்படி, இன்று(டிச.,21) மதியம் 12 மணியளவில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியினை எட்டியுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புதரா, வல்லக்கடவு,உள்ளிட்ட பகுதிகளில் அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 141 கன அடியினை எட்டும் நிலையில், 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், 142 அடியாக நீர்மட்டம் உயரும் நிலையில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அணையில் இருந்து உபரி நீர் கேரள பகுதிகளுக்கு திறந்துவிடப்படும் என்று தெரிகிறது.