இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் டெஹ்ரா துணைப்பிரிவைச் சேர்ந்த இரண்டரை மாத பெண் குழந்தைக்கு H3N2 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பெண் குழந்தை தாண்டா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறது. "இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் H3N2 வைரஸின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடுமையான இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்காக சனிக்கிழமையன்று தாண்டா மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்ட 10 வார பெண் குழந்தைக்கு H3N2 இருப்பது சோதனையின் மூலம் தெரியவந்திருக்கிறது" என்று CMO கங்க்ரா டாக்டர் சுஷில் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத இறுதியில் H3N2 வைரஸ் பரவல் குறையும்
பருவகால காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸா ஏ, பி, சி மற்றும் டி ஆகிய 4 வகைகளால் ஏற்படும் கடுமையான சுவாசக் குழாய் நோய் தொற்றாகும். இந்த வகைகளில், இன்ஃப்ளூயன்ஸா ஏ என்பது மனிதர்களுக்கு பரவும் மிக பொதுவான நோய்க்கிருமியாகும். உலகளவில், இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் பொதுவாக ஆண்டின் சில மாதங்களில் அதிகரிக்கும். இந்தியாவில் பொதுவாக பருவகால காய்ச்சல் பரவுவது இரண்டு காலகட்டத்தில் உயர்கின்றன: 1. ஜனவரி முதல் மார்ச் வரையில், 2. பருவமழைக்குப் பிந்தைய காலத்தில். மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, பருவகால காய்ச்சல் பரவுவது மார்ச் மாத இறுதியில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.