கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு பதிவு
விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் பப் மற்றும் எம்ஜி சாலையில் உள்ள பல நிறுவனங்கள், இரவு குறிப்பிட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதற்காக பெங்களூரு போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். டிசிபி சென்ட்ரல் படி, பப்கள் அதிகாலை 1.30 மணி வரை திறந்திருந்தன. காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட மூடும் நேரம் அதிகாலை 1 மணி என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரத்தில் அப்பகுதியில் அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கப்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே உள்ள ஒன்8 கம்யூன் பப், விதிகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட பப்களில் ஒன்றாகும்.
பல இடங்களில் கிளை கொண்ட One8 கம்யூன்
விராட் கோலியின் One8 கம்யூன் டெல்லி, மும்பை, புனே மற்றும் கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. அதில் தற்போது வழக்கை சந்தித்து வரும் பெங்களூரு கிளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இது ரத்னம் வளாகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் எக்ஸ்-இல் பகிர்ந்த ஒரு வீடியோவில், "வேஷ்டி" அணிந்ததற்காக One8 கம்யூனின் மும்பை கிளைக்குள் நுழைய மறுக்கப்பட்டதை விவரித்ததை அடுத்து அந்நிறுவனத்தின் மீது சர்ச்சை வெடித்தது. மற்றொரு சம்பவத்தில், ஃபோனோகிராபிக் பெர்ஃபார்மன்ஸ் லிமிடெட் (பிபிஎல்) காப்புரிமை பெற்றுள்ள பாடல்களை இசைப்பதை ஒன்8 கம்யூனை டெல்லி உயர்நீதிமன்றம் தடை செய்ததை அடுத்து, கடந்த ஆண்டு இந்நிறுவனம் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது.