'அமைதியான போராட்டம்': 1200 டிராக்டர்கள், புல்டோசர்களுடன் இன்று டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் திட்டம்
பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று தங்கள் 'டெல்லி சலோ' பேரணியை மீண்டும் தொடங்க உள்ளனர். அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி அவர்கள் ஒரு வாரமாக இந்த பேரணியை நடத்தி வருகின்றனர். தற்போது ஹரியானா-பஞ்சாப் ஷம்பு எல்லையில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மத்திய அரசுடன் நான்காவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் போராட்டத்தை தொடங்குவதாக நேற்று அறிவித்தனர். இந்த பேரணி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தடுக்க அதிகாரிகள் அமைக்கும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் போக்குவரத்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
பிரதமர் நரேந்திர மோடி முன் வந்து உதவ வேண்டுகோள்
விவசாயிகள் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் அமைதியாக போராட்டத்தை நடத்துவோம் என்றும் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் டல்வால் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை டெல்லிக்கு அமைதியான முறையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறியுள்ளார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முன் வந்து உதவ வேண்டும் என்று விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பந்தேர் வேண்டுகோள் விடுத்தார். "எங்களைக் கொல்லலாம், ஆனால் தயவு செய்து விவசாயிகளை ஒடுக்காதீர்கள். குறைந்தபட்ச விலை உத்திரவாதம் தொடர்பான சட்டத்தை அறிவித்து இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.