ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உயர் நீதிமன்றத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தங்கள் தலைமையகத்தை காலி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்ய ஜூன் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை விரிவுபடுத்துவதற்காக நீதித்துறை ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் உள்ள இடத்தை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கி உள்ளதால், அங்கு உள்ள தலைமையகத்தை காலி செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு(ஏஏபி) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆம் ஆத்மி தனது அலுவலகங்களுக்கு பொருத்தமான நிலத்தை ஒதுக்கீடு செய்ய நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தை(L&DO) அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு 3 மாதம் அவகாசம்
"எல்&டிஓ ஆம் ஆத்மியின் விண்ணப்பத்தை பெற்று அதன் முடிவை நான்கு வார காலத்திற்குள் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி தனது அலுவலகத்தை காலி செய்ய ஜூன் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. "வரவிருக்கும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, வளாகத்தை காலி செய்ய ஜூன் 15, 2024 வரை கால அவகாசம் வழங்குகிறோம், இதனால் மாவட்ட நீதித்துறையின் இடத்தை விரிவுபடுத்த ஒதுக்கப்பட்ட நிலம் விரைவாக பயன்படுத்தப்படும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.