ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா?
தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடம், நேற்று தமிழக காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை திருவேங்கடம் வசம் இருந்ததாகவும், அவற்றை கைப்பற்ற திருவேங்கடம் தங்கியிருந்த வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவரை அழைத்துச் சென்ற போது, அவர் தப்ப முயன்றதாகவும், காவல்துறையினர் சிலரை அவர் தாக்கியதாகவும், உடனே போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த என்கவுண்டர் விவகாரம் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை.
இந்த என்கவுண்டரில் பல கேள்விகள் அரசியல் வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்
இந்த என்கவுண்டரில் பல கேள்விகள் அரசியல் வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர் இந்த என்கவுண்டர் விவகாரமே, யாரையோ தப்ப வைக்க நடைபெற்றதாகவும், இது ஒரு போலி என்கவுண்டர் என அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருவேங்கடம் கொல்லப்பட்டது, கொலையின் பின்னணியில் உள்ள உண்மையை மூடிமறைக்கும் என்றும், மாநில அரசு தொடர்ந்து உண்மைகளை மறைத்து வருவதாகவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். அதிமுக செயல்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாசும் இந்த விவகாரத்தில் சந்தேங்கள் இருப்பதாக கூறினார்.
பல விடை தெரியாத கேள்விகளை எழுப்பும் என்கவுண்டர்
இந்த என்கவுண்டர் விவகாரத்தில், பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன: அதிகாலையில் அழைத்துச் சென்று கொலையை செய்யப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? காவலில் இருக்கும் கைதி கைவிலங்கிட்டு இருக்கும் போது எப்படி காவல்துறையினரை தாக்க முடியும்? கொலை செய்ததாக தானே சரணடைந்ததாக கூறப்படும் நபர் தப்பி ஓட வேண்டும் என எப்படி நினைத்திருப்பார்? அவர் கையில் கள்ளத்துப்பாக்கி எப்படி வந்தது? என பல விடைதெரியாத கேள்விகள் இந்த விஷயத்தில் ஆளுங்கட்சி எதையோ மறைக்க நினைக்கிறது என்ற பிம்பத்தையே அதிகரிக்கிறது. இந்த கொலை வழக்கில் தானாக சரணடைந்தவர் ஏன் தப்பியோட முயற்சிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதாக, 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம் கூறுகிறார்.
திமுக ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளனவா?
தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் அரசியல் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பக்கம், 'தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீர்குலையும். ஸ்டாலினின் விடியல் ஆட்சியிலும் அது விதிவிலக்கல்ல' என அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது. ஆனால், ஆளும் திமுக அரசோ, 'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பதால்தான் ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட கைது செய்யப்படுகிறார்கள்' என்கிறது. ஸ்டாலினின் தி.மு.க ஆட்சிக்கு வந்த 200 நாள்களில் 587 கொலைகள் நடந்துள்ளதாக அரசு வழக்கறிஞரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஐ.எஸ்.இன்பதுரை ஆளுநர் ரவியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த கொலைகளுக்கு ஆளும் கட்சியின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
என்கவுண்டர் குறித்து SC வழிகாட்டுதல்கள்
குற்றவியல் நடமாட்டம் தொடர்பான எந்தவொரு உளவுத்துறை அல்லது உதவிக்குறிப்பும் வழக்கு நாட்குறிப்பில் அல்லது ஏதேனும் மின்னணு வடிவத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். என்கவுன்டர்-மரணத்தின் போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். என்கவுன்டர் தொடர்பாக ஒரு சுயாதீன விசாரணை CID அல்லது மற்றொரு காவல் நிலையத்தின் போலீஸ் குழுவால் நடத்தப்பட வேண்டும். என்கவுண்டர் சம்பவம் பற்றிய தகவல் NHRC அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட வேண்டும் உள்ளிட்ட நடைமுறை விதிகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. அதேபோல மனித உரிமைகள் ஆணையமும் என்கவுன்டரில் காவல்துறையினரே சம்பந்தப்பட்டிருப்பதால், மாநில சிஐடி போன்ற ஒரு சுயாதீன ஏஜென்சியால் வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விதிகளை வகுத்துள்ளது.