உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல்
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 8வது நாளாக நடந்து வரும் நிலையில், நான்கு வெவ்வேறு ஏஜென்சிகளை கொண்டு 4 விதமான மீட்புப் பணியைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று உத்தரகாண்ட் சென்றடைந்தார்.
மீட்புப் பணிகள் முடிய இன்னும் 4 முதல் 5 நாட்கள் ஆகலாம் என்று பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறியுள்ளார்.
"ஆனால் தெய்வங்கள் போதுமான அளவு கருணை காட்டினால், அது அதற்கு முன்னதாகவே நடக்கும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டக்ஜ்வ்
அவசரகால வெளியேற்ற பாதை தற்போது கட்டப்பட்டு வருகிறது
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசரகால வெளியேற்ற பாதை தற்போது கட்டப்பட்டு வருகிறது.
இன்று பிற்பகலுக்குள் எல்லைச் சாலைகள் அமைப்பு(BRO) சில்க்யாரா சுரங்கப்பாதைக்கு ஒரு புதிய சாலையைக் கட்டி முடிக்கும் என்று மீட்புக் குழு அதிகாரிகள் நம்புகிறார்கள்.
அப்படி அது கட்டி முடிக்கப்பட்டால், அது சிக்கிய தொழிலாளர்களை அடைய மற்றொரு வழியை கொடுக்கும்.
8 நாட்காளாக அந்த தொழிலாளர்களை மீட்க மீட்பு குழுக்கள் அதிநவீன ட்ரில்லிங் இயந்திரங்களை வைத்து பாறைகளில் துளையிட்டு வந்தனர்.
எனினும், தோண்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே அந்த சுரங்கப்பாதை மீண்டும் மீண்டும் இடிந்து விழுந்ததால், இதுவரை துளையிடும் பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை.
இதனால், வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை.