செயற்கைக்கோள் வழி இணையச்சேவை.. எலான் மஸ்க்கை எதிர்க்கும் முகேஷ் அம்பானி, ஏன்?
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை நேற்று(ஜூன்-22) சந்தித்தார். சந்திப்பின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவில் செயற்கைகோள் மூலம் இணையச்சேவை வழங்குவதற்கான செயற்கைக்கோள் அலைவரிசையை விநியோக முறையில் எலான் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செயற்கைக்கோள் அலைவரிசையை ஏல முறையில் விநியோகம் செய்யாமல், மற்ற நாடுகளில் செயல்படுவதைப் போல உரிம முறையில் விநியோகம் செய்ய செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு வருகிறார் எலான் மஸ்க். ஆனால், ஏல முறையிலேயே செயற்கைக்கோள் அலைவரிசையை விநியோகம் செய்யவேண்டும் எனக் கூறிவருகிறார் முகேஷ் அம்பானி.
ஏல முறை vs உரிம முறை:
செயற்கைக்கோள் மூலம் இணையச்சேவையை எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் வழங்கத் திட்டமிட்டு வருகின்றன. பிற நாடுகளில் உரிமை முறையிலேயே செயற்கைக்கோள் அலைவரிசை விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் உரிமத்தைப் பெற்று நிறுவனங்கள் இணையச் சேவையை வழங்க முடியும். ஆனால், இந்தியாவில் இணையச்சேவை வழங்குவதற்கு ஏல முறையே தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இதில் எந்த முறை மூலம் விநியோகத்தை மேற்கொள்வது என்பது குறித்த ஓட்டெடுப்பில் கலந்து கொண்ட 64 நிறுவனங்களில் 48 நிறுவனங்கள் உரிம முறைக்கு ஆதரவாகவும், 12 நிறுவனங்கள் ஏல முறைக்கு ஆதரவாகவும் வாக்களித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணையச்சேவையின் எதிர்காலம் இருக்கிறது.