மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ்
கடந்த மாதம் நடைபெற்ற மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்சிகள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இறுதியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு, 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. மேலும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரஸின் முயற்சிக்கு, இத்தேர்தல் வெற்றி அச்சாரம் போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது.
ராஜஸ்தானில் 115 இடங்களை கைப்பற்றிய பாஜக
ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 101 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்க முடியும். கடந்த 30 ஆண்டுகளில் ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தாத ராஜஸ்தான், இம்முறையும் அதையே செய்துள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, இம்முறை வெறும் 68 இடங்களே கிடைத்துள்ளது. பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இது தவிர, பாரத ஆதிவாசி கட்சிக்கு மூன்று தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு இரண்டு இடங்களும், ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி தல ஒரு தொகுதியை வென்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் எட்டு தொகுதிகளில் வென்றுள்ளனர்.
தெலுங்கானாவில் முதல் முறையாக ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்
தேர்தல் நடந்ததிலேயே ஒரே தென்னிந்திய மாநிலமான தெலுங்கானா, காங்கிரசை தேர்ந்தெடுத்துள்ளது. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபையில், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும், பாரத ராஷ்டிர சமிதி 38 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் 6 தொகுதிகளிலும், சிபிஐ ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது. மேலும், இரவு 9:45 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கை முடிவடையாத 2 தொகுதிகளில், பிஆர்எஸ் 1 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக
230 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், 153 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக 5வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவடையாத மேலும் 11 தொகுதிகளில், பாஜக முன்னிலையில் உள்ளது. கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால் காங்கிரஸ், பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில், இம்முறை காங்கிரஸ் 58 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. 7 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாரத ஆதிவாசி கட்சி, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்
கடந்த முறை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், இம்முறை பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்றத்தில், 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக பெரும்பான்மையை உறுதி செய்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவடையாத 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் மட்டுமே வென்று, இரண்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது. கோண்ட்வானா கந்தன்ட்ரா கட்சி, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.