Loading...
தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்ட வழக்கு அரசியலமைப்பு அமர்வுவுக்கு பரிந்துரை

தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 24, 2026
06:41 pm

செய்தி முன்னோட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு 2023 ஆம் ஆண்டில் கொண்டு வந்த புதிய சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், தற்போது பெரிய அமர்வின் பரிசீலனைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இதனை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைக்கும் அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

சர்ச்சை

2023 ஆம் ஆண்டின் புதிய நியமன சட்டம் சர்ச்சையானது ஏன்?

தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், ஒரு மத்திய கேபினட் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே இடம்பெறுமாறு 2023 சட்டத்தின் பிரிவு 7 வழிவகை செய்கிறது.

இதற்கு முன்பாக பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவே தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு மத்திய அமைச்சரை சேர்த்ததன் மூலம், ஆணையர்களை தேர்வு செய்யும் அதிகாரம் ஆளும் மத்திய அரசின் கைகளுக்கே முழுமையாக சென்றுவிடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்திற்குள் வெடித்துள்ள புதிய சர்ச்சையும் உட்பூசல்களும்

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்குள் உட்பூசல் மோதல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற சுமார் 13 கோடி வாக்காளர்களை பாதிக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) தொடர்பான முடிவுகளுக்கு, பிற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை உத்தியோகபூர்வமாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இது தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT

விளக்கம்

எதிர்க்கட்சிகளின் கண்டனமும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ விளக்கமும்

தேர்தல் ஆணையத்திற்குள் எழுந்துள்ள இந்த மோதல் போக்கை சுட்டிக்காட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இருப்பினும், இந்தச் சர்ச்சைகளை மறுத்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், "ஒரு ஜனநாயக அமைப்பில் ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு இடையே வெவ்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பது மிகவும் இயல்பான ஒரு முடிவெடுக்கும் நடைமுறையே ஆகும்" என்று விளக்கம் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வு அளிக்கப்போகும் தீர்ப்பே இச்சட்டத்தின் எதிர்காலத்தையும், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும் தீர்மானிக்கும்.

ADVERTISEMENT