இந்தியத் தேர்தல் ஆணையத்தில் உச்சக்கட்ட மோதல்: 13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்து 2 ஆணையர்கள் கெடுபிடி
செய்தி முன்னோட்டம்
தேர்தல் ஆணையம்(ECI) நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் SIR மூலம், இதுவரை வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பாக ஆணையத்திற்குள்ளேயே கடுமையான மோதல் வெடித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய மூவர் அடங்கிய தேர்தல் ஆணையத்தில், கடந்த 10 மாதங்களில் 14 முறைக்கும் அதிகமாக சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இரு ஆணையர்களும் தங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பு
முக்கிய எதிர்ப்புகள்
புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கும் படிவம் 6-ல், விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர்/தாத்தா பாட்டி கடந்த 'SIR' வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனரா என்ற கேள்வி புதிதாக இணைக்கப்பட்டது. விதிகளை திருத்தாமல் இத்தகைய மாற்றங்களைச் செய்வது "சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது" என இரு ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்தும் இம்மாற்றம் அமல்படுத்தப்பட்டது.
வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரம் சட்டப்படி அந்தந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், டெல்லியில் உள்ள IT பிரிவு மூலம் இத்தரவுகள் மையப்படுத்தப்படுவதாகவும், ERO-க்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஆணையர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்காளம் வாக்காளர் பட்டியல் சர்ச்சை
மேற்கு வங்கத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்ட சிறப்புத் தீர்ப்பாயங்கள் சேர்த்த வாக்காளர்களுக்கு எதிராக, தேர்தல் ஆணையத்தின் சார்பில் யார் அனுமதி பெற்று மேல்முறையீடு செய்தது என்பது குறித்துச் சுக்பீர் சிங் சந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மென்பொருள் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களைச் சமர்ப்பித்து தகுதி பெற்ற 97 வாக்காளர்களின் பெயர்களை கோவா இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாமல் போனது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புகார்
அமைச்சரவை செயலாளரிடம் புகார்
ஆணையத்தின் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து அதிருப்தி அடைந்த இரண்டு ஆணையர்களும், நாட்டின் தலைமை செயலாளரான கேபினட் செயலாளருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது தேர்தல் ஆணையத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324 மற்றும் 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையச் சட்டப் படி, ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையர் தனச்சார்பாக செயல்படுவதாகபுகார்கள் எழுந்துள்ளன.