இந்தியாவுக்கு அதிக சுகாதார ஆபத்து: எல் நினோ தாக்கத்தால் வெப்ப அலை & டெங்கு அபாயம்; WHO எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பதால் உருவாகும் எல் நினோ காலநிலை மாற்றம், உலகம் முழுவதும் கடுமையான சுகாதார நெருக்கடிகளை உருவாக்கும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது. இதனையடுத்து 2026 அக்டோபர் முதல் 2027 செப்டம்பர் வரை தனது உலகளாவிய அவசரகால நடவடிக்கையை மிக உயர்ந்த நிலையான கிரேடு 3 ஆக உயர்த்தியுள்ளது. இதன் முதல் ஆறு மாத செயல்பாடுகளுக்கு சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா
இந்தியாவில் வெப்ப அலைகள், டெங்கு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரிக்கும் அபாயம்
உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, தெற்காசிய பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பமும் குறைவான மழையும் பதிவாகும் என்பதால் இந்தியா அதிக சுகாதார ஆபத்தில் உள்ளது.
நீண்டகால வெப்ப அலைகளால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்பத் தாக்குதல் ஏற்படலாம்.
மேலும் குடிநீர் தட்டுப்பாட்டால் வீடுகளில் தண்ணீரை சேமித்து வைப்பதன் மூலம் டெங்கு மற்றும் மலேரியா கொசுக்கள் உற்பத்தியாகவும், திடீர் வெள்ளத்தால் எலி காய்ச்சல் பரவவும், வறட்சியால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பருவமழை மாற்றம்
பருவமழை மாற்றமும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் எளிய மக்களும்
இந்தியாவின் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாகப் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், மழை பற்றாக்குறை விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகத்தை பாதிக்கும்.
குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற திறந்தவெளியில் பணிபுரிவோரும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அறிவுறுத்தல்
மருத்துவமனைகளைத் தயார்படுத்தவும் முன்னெச்சரிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்
எல் நினோ நேரடியாக நோய்களை உருவாக்காவிட்டாலும், நோய்கள் வேகமாக பரவுவதற்கான சூழலை உருவாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே அரசுகள் நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல், மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைத்தல் மற்றும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
வானிலை ஆய்வு மையம் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து செயல்பட்டால் பேரிடர்களைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.