காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் குளிர்கால விடுமுறை: டெல்லியில் அதிரடி
6 நாட்களாக தொடர்ந்து காற்று மாசுபாட்டினால் டெல்லி பாதிக்கப்பட்டு வருவதால், நவம்பர் 9 முதல் 18 வரை டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அரசு இன்று பிற்பகல் அறிவித்துள்ளது. வழக்கமாக டிசம்பர் முதல் ஜனவரி வரை விடப்படும் குளிர்கால விடுமுறையை முன்கூட்டியே வழங்குவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. "காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளுக்கும் வழக்கமாக டிசம்பர் முதல் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை, நவம்பர் 9-18 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது," என்று டெல்லி கல்வித் துறை தெரிவித்துள்ளது. கடுமையான காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர பிற பள்ளி மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிகளை உடனே மூட உத்தரவு
இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே டெல்லியில் உள்ள பள்ளிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. ஏற்கனவே, நவம்பர் 10ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர பிற பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படி தொடர்ந்து பள்ளிகள் இயங்காமல் இருந்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், இந்த விடுமுறைகளை அரையாண்டு தேர்வுக்கு பின் விடுக்கப்படும், குளிர்கால விடுமுறையுடன் சரிக்கட்ட இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் கல்வி அமைச்சர் அதிஷி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் மற்றும் டெல்லி அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.