சென்னை மெரினா கடற்கரையில் நவீன நீச்சல்குளம்; துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியே 37 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இந்த நவீன நீச்சல்குளம் இன்றிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. முதலில் தனியார் பராமரிப்பில் இருந்த இந்த நீச்சல் குளம், தற்போது சென்னை மாநகராட்சி நேரடியாக பராமரிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நீச்சல் குளத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி, நீச்சல் குளத்தில் குளிக்க நேரத்தை நிர்ணயிக்கும் மற்றும் கட்டண செலுத்துவதற்கான க்யூஆர் கோடு சேவையையும் தொடங்கி வைத்தார்.
Twitter Post
நீச்சல் குளம் திறந்திருக்கும் நேரம் மற்றும் விவரங்கள்
நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும். பெண்களுக்கான நேரம் காலை 8.30 முதல் 9.30 மணி வரை இருக்கும். 14 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ஒரு மணி நேர நீச்சலுக்கான கட்டணம் ரூ.50, ஆன்லைனில் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி உட்பட ரூ.45 ஆக இருக்கும். 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கான கட்டணம் ரூ.30, ஆன்லைனில் ரூ.25 ஆக இருக்கும். பராமரிப்பு பணிக்காக, திங்கட்கிழமைகளில் நீச்சல் குளத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
நீச்சல் குளத்தில் இறங்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
நீச்சல் குளத்தில் இறங்கும் முன் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை சென்னை மாநகராட்சி பட்டியலிட்டுள்ளது. அதன்படி, நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன், முதலில் ஷவரில் குளிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் பனியன், பேன்ட், லுங்கி அல்லது டவல் அணிந்து நீந்த அனுமதி இல்லை; ஆண்களுக்கும், பெண்களுக்கும் முறையான நீச்சல் உடை கட்டாயம். பெண்கள் சுடிதார் அணிய அனுமதி உண்டு. எனினும் சேலை, பாவாடை, நைட்டி, மிடி அணிந்து நீந்த அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.