நாய் கடித்தால் பல் பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு
நாய் கடி தொடர்பான வழக்குகளில், நாயின் ஒரு பல் பட்ட இடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் 0.2 செ.மீ காயத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிலும், தெரு விலங்குகள்/நாய்கள் கடித்தால் அதற்கு அரசாங்கம் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறிய பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 193 மனுக்களை தள்ளுபடி செய்தது. அத்தகைய இழப்பீட்டை மதிப்பிடுவதற்கு அந்தந்த மாவட்டங்களின் துணை ஆணையர்கள் தலைமையில் குழுக்களை அமைக்குமாறு பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனி நபர்களின் நாய் கடித்தால் அவர்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது
"தகுந்த ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்படும் இழப்பீடு கோரிக்கைகள் நான்கு மாத காலத்திற்குள் இந்த இழப்பீடு கமிட்டிகளால் நிறைவேற்றப்படும்... இழப்பீடு செலுத்துவதற்கு முதன்மையான பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். அதற்கு பிறகு, நாய் உரிமையாளர்களான தனியார் நபர்கள் அல்லது ஏஜென்சிகளிடம் இருந்து அந்த பணத்தை திருமப பெறும் உரிமை அரசுக்கு இருக்கிறது." என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், இந்த தீர்ப்பின் நகல்களை முதன்மைச் செயலாளர்(உள்துறை) அலுவலகத்திலும், பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகரின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகங்களிலும் சமர்ப்பிக்குமாறு மேலும் உத்தரவிட்டது.