தேர்தல் 2024: காமிக்-கான் விழாவில் திமுக எடுத்த டிஜிட்டல் ட்விஸ்ட்
சென்னையில் கடந்த இரு தினங்களாக காமிக்-கான் திருவிழா நடந்தது. அதில், திமுக சார்பாக, திராவிட கொள்கைகள் குறித்த கேமிங் ஆப் தொடங்கப்பட்டது. இம்முறை நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தலை, 18 வயது முடிந்த இளம் தலைமுறையினர் பலரும் சந்திக்கவுள்ள நிலையில், திமுக அவர்களை சென்றடைய ஒரு நவீன டிஜிட்டல் வழியை தேர்வு செய்துள்ளது. 'மக்களின் முதல்வர்' என்று பெயரிடப்பட்ட இந்த கேம், பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க்கால் (PEN) உருவாக்கப்பட்டது. அதில் பிளேயர்கள், ஒரு நாள் முதல்வராக செயல்பட அனுமதிக்கிறது. இந்த கேமில், பிளேயர்களை முதல்வராக உருகப்படுத்தி, ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களையும், தேர்தல் இயக்கவியலில் திரைக்குப் பின்னால் இருக்கும் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களின் முதல்வர் கேம்
இந்த விளையாட்டில், திராவிடக் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் தேர்வுகளைச் செய்யும்போது விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதி வழங்கப்படுகிறது. இந்த விளையாட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது மற்றும் 16 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் "திராவிட மாதிரி" பற்றி அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 'மக்களுடன் முதல்வர்' திட்டமும் இந்த விளையாட்டில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி மேலாளர் பூஜா பிரதீப்,"இது "திராவிட சித்தாந்தத்தை" இளைஞர்களுக்கு புரிய வைப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்களிக்க வரும்போது திராவிட ஆட்சி முறையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த கேம் இளைஞர்களிடையே பிரபலமாக உள்ளது. கிட்டத்தட்ட 1,500 நபர்கள் ஏற்கனவே கேமை நிறுவியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.