ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ்
2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை.,20ம் தேதி டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடரில், துவங்கிய நாளில் இருந்து மணிப்பூர் கலவரம் குறித்து தொடர் அமளிகளை எதிர்க்கட்சியினர் செய்து வருவதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுகிறது. வேறு எந்த அலுவல் பணிகள் குறித்தும் விவாதங்கள் நடக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில், தமிழக ஆளுநரை திரும்ப பெறுவதற்கான விவகாரம் குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸினை தாக்கல் செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்குகள் சீர் குலைந்து விட்டது - எம்.பி. சி.வி.சண்முகம் நோட்டீஸ்
மேலும், எம்.பி. டி.ஆர்.பாலு அந்த நோட்டீஸில் மக்களவையில் மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதே போல், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வரும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது. இதனிடையே, தமிழகத்தில் சட்ட ஒழுங்குகள் சீர் குலைந்து விட்டது. எனவே அந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினரின் சார்பில் எம்.பி. சி.வி.சண்முகம் நேற்று(ஜூலை.,26) மாநிலங்களவையில் கோரிக்கை வைத்து நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.